மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் எதிரித் தாக்குதல்களில் இருந்து அமைதிகாக்கும் அமைதிப்படை வீரர்கள் உட்பட 14 பேரை பாதுகாப்பாக மீட்ட இலங்கை விமானப்படைவீரர்களின் வீரச் செயல்.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் திட்டத்தின் (MINUSCA) கீழ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படை (இலங்கை விமானப் பிரிவு), கடந்த 2026 ஜூன் 30 அன்று  இடம்பெற்ற   அபாயகரமான எதிரித் தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு மீட்பு நடவடிக்கையை (CASEVAC) வெற்றிகரமாக நிறைவு செய்தது.  இந்த நடவடிக்கை, இலங்கை விமானப்படை வீரர்களின் இணையற்ற தொழில்முறைத் திறனையும் தைரியத்தையும் உலகிற்கு மீண்டும் ஒருமுறைநிரூபித்துள்ளது.  

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அம் தஃபோக் பகுதியில் அமைதிப்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சாம்பியா  நாட்டு துருப்புக்களை குறிவைத்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழு ஒன்று கடுமையான தாக்குதலை  மேற்கொண்டது . இந்தத் தாக்குதலில் பல சாம்பியா வீரர்கள், பொதுமக்கள் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.  நிலைமை மோசமடைந்ததால், காயமடைந்தவர்களை மீட்க பாகிஸ்தான் விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைக்க முதற்கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் நிலவிய மோசமான வானிலை காரணமாக அது தோல்வியடைந்தது. அதன்படி, சமாதானப் படையின் படைத் தளபதி இந்த மீட்பு  நடவடிக்கையை இலங்கை விமானப்படை  விமான  பிரிவிடம் உடனடியாக ஒப்படைத்தார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, நிலவிய மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், இலங்கை விமானப்படைத்  பிரிவின் கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் அசிரி பத்திரகே மற்றும் பணியாளர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் . குரூப் கேப்டன் அசிரி பத்திரகே தலைமையிலும், ஃபிளைட் லெப்டினன்ட் தில்ஹாஷ் அத்தப்பத்து  துணை விமானியாகவும்   இலங்கை விமானப்படைக்கு சொந்தமான  UNO 325P ரக Mi-17 ஹெலிகாப்டர்  அன்று காலை 07:30 மணிக்கு பிரியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த மீட்பு குழுவில்  ஃபிளைட் சார்ஜென்ட் ஹெட்டியாராச்சி டி.எஸ். விமானப் பொறியாளராகவும், ஃபிளைட் சார்ஜென்ட் மனோஜ் ஏ.ஜி.ஜி. லார்ட் மாஸ்டராகவும்,கோப்ரல்  விஜேதுங்க டபிள்யூ.எம்.பி.பி. மற்றும் சிரேஷ்ட வான்படை வீரர்  அபேசிங்க ஜி.டி. ஆகியோர் வான் துப்பாக்கி வீரர்களாகவும் இடம்பெற்றிருந்தனர்.   விமானத்தில் இருந்த வான்வழி மருத்துவ மீட்புக் குழுவில் (AMET) பிளைட்  லெப்டினன்ட் யதீஷ ரத்னசிறி, வாரண்ட் அதிகாரி டி.எம். சுமதிபால மற்றும் பிளைட்  சார்ஜென்ட் கே.பி.டி. ருவன்குமரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆரம்பத்தில் கூடுதல் துருப்புக்களை ஏற்றிச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தாலும், சண்டை நடக்கும் பகுதியில் நிலைமை வேகமாக மோசமடைந்ததால், தலைமைத் தளபதியின் உத்தரவின் பேரில் விமானிகள் விமானத்தை நேரடியாகப் போர்க்களத்திற்கே செலுத்த முடிவு செய்தனர்.

அதன்படி, இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பயணித்த பிறகு, எதிரித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த மிகவும் அபாயகரமான சண்டைப் பகுதியை அந்த விமானம் சென்றடைந்தது.  ஹெலிகாப்டரைத் தரையிறக்குவது கூட பாதுகாப்பற்றதாக இருந்தது, மேலும் எதிரிகள் எந்த இடத்திலிருந்து தங்கள் தாக்குதல்களைத் தொடங்குவார்கள் என்பதும் நிச்சயமற்றதாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையிலும், தங்கள் உயிரைப் பணயம் வைத்த இலங்கை விமானப்படை  விமானிகள், இயந்திரங்கள் இயங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றி, மிகக் குறுகிய நேரத்தில் காயமடைந்த 14 பேரை விமானத்தில் ஏற்றினர். விமானப் பயணம் முழுவதும் விமானத்தில் இருந்த இலங்கை விமானப்படை  மருத்துவக் குழுவினர் (AMET), குறைந்த இடவசதி மற்றும் மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், காயமடைந்தவர்களின்  உயிரினை பாதுகாக்க   போராடினர். 

இது ஐ.நா. அமைதிப்படை விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும், ஒரு அவசரகால நடவடிக்கையில் 14 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்ட முதல் நிகழ்வாக இது வரலாற்று  சாதனைப் புத்தகங்களில் இடம்பெறுகிறது. 

தமது உயிர்களின் பாதுகாப்பை விட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்த இலங்கை விமானப்படை வீரர்களின் இணையற்ற தைரியத்தையும் தொழில்முறைத் திறனையும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் படைத் தளபதி பெரிதும் பாராட்டியுள்ளார். இது சர்வதேச சமூகத்தில் இலங்கை ஆயுதப் படைகளின் நம்பகத்தன்மையையும் நற்பெயரையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை